200 சவரன் நகை கொள்ளைபோனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள புதிய புகாரால் பரபரப்பு.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் இருந்து ரூ. 3.6 லட்சம் மதிப்பிலான நகைகள் காணாமல் போனதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனது வீட்டில் வேலை செய்யும் மூன்று பேர் மீது சந்தேகம் இருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் புகாரின் பேரில் அவரது வீட்டில் வேலை செய்த லட்சுமி, ஈஸ்வரி மற்றும் ஈஸ்வரியின் கணவர் உமாபதி ஆகியோரை காவல்துறையினர் விசாரித்தனர்.

ஈஸ்வரிக்கும் இந்த திருட்டிற்கும் சம்பந்தம் உள்ளதாக போலீஸார் சந்தேகித்ததை அடுத்து நடைபெற்ற விசாரணையில் “நான் ஐஸ்வர்யாவின் சி.ஐ.டி. நகர் வீட்டில் நீண்ட நாட்களாக வேலை செய்கிறேன். ஐஸ்வர்யா அவ்வப்போது வெளியூர் செல்லும் போது வீட்டையும் அவரது மகன்களையும் பார்த்துக் கொள்வேன்.

இவர்கள் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்து வந்தேன் அதற்காக எனக்கு மாதம் ரூ. 30000 சம்பளம் கொடுத்தனர். குடும்பம் நடத்த இந்த சம்பளம் போதுமானதாக இல்லாத நிலையில் ஐஸ்வர்யா-வுக்கு தெரியாமல் நகைகளை சிறுக சிறுக திருடினேன் இது அவருக்கு தெரியாததால் தொடர்ந்து திருடி வந்தேன்” என்று போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

திருடிய நகைகளை ஐஸ்வர்யாவின் கார் ஓட்டுநர் வெங்கடேசனுடன் சேர்ந்து விற்றதன் மூலம் இரண்டு அடுக்குமாடி வீடுகளை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

திருடப்பட்ட நகைகளை வாங்கியதாக மயிலாப்பூரைச் சேர்ந்த வினால்க் சங்கர்நவாலியை கைது செய்து விசாரித்து வரும் தேனாம்பேட்டை போலீஸார் அவரிடமிருந்து 340 கிராம் (42.5 சவரன்) தங்க நகைகளை பறிமுதல் செய்ததுடன் திருட்டு நகைக்கு எவ்வளவு பணம் கொடுத்தார் என்றும் விசாரித்து வருகிறது.

ஈஸ்வரியின் வாக்குமூலத்தை அடுத்து கார் ஓட்டுநர் வெங்கடேசனை கைது செய்து அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், திருட்டு நகையை விற்ற பணத்தை ஈஸ்வரி அவரது கணவர் உமாபதியின் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததாகக் கூறியதை அடுத்து உமாபதியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது.

சோழிங்கநல்லூரில் உள்ள வீட்டை வாங்கிய போது இதற்கு பணம் ஏது என உமாபதி, ஈஸ்வரியிடம் கேட்டுள்ளார். அதற்கு ஈஸ்வரி நான் ஐஸ்வர்யா ரஜினியின் பினாமி. என் பெயரில் அவர் சொத்துகளை வாங்கியுள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. வெளியுலகை பொருத்தமட்டில் இது நம் வீடு, ஆனால் உண்மையில் அவருடைய வீடு என நம்ப வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஈஸ்வரி வீட்டில் நடத்திய சோதனையில் 100 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி, 30 கிராம் வைரம் மற்றும் ரூ. 95 லட்சம் மதிப்பிலான வீட்டு பத்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

3.6 லட்ச ரூபாய் மதிப்புடைய நகைகள் காணாமல் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புகார் அளித்த நிலையில் ஈஸ்வரியின் வீடு மற்றும் திருட்டு நகைகளை பறிமுதல் செய்தது என மொத்தம் 143 சவரன் நகை கைப்பற்றப்பட்டுள்ளதை அடுத்து ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீட்டிலும் ஈஸ்வரி தனது கைவரிசையை காட்டியிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளை வைத்திருந்த அவரது வீட்டின் லாக்கரின் அளவு இவ்வளவு நகைகளும் எப்பொழுது வாங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கேட்டுள்ளனர்.

இந்த நிலையில், தனது வீட்டில் இருந்து 200 சவரன் நகை காணாமல் போயுள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் புதிய புகார் ஒன்றை அளித்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.