டில்லி:
ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வ தற்கான தடை இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர்களது முன்ஜாமின் ஆகஸ்டு1ந்தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க மத்தியஅரசு துடித்து வருகிறது. ஆனால், வழக்கில் சரியான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படாததால், வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக டில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஜாமின் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது இருவருக்கும் முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போதும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. வழக்கை ஆகஸ்டு 1ந்தேதி தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம், அதுவரை சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டார்.