டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு  நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால்,   மாநிலம் முழுவதும் ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான அளவை எட்டி வருகிறது. காற்றின் தரக்குறியீடு 400க்கும் அதிகமான புள்ளிகளை எட்டியுள்ளது. டெல்லியில் காற்றின் தரம் மிகமோசமான அளவை எட்டியுள்ளதால், ஆரம்பப் பள்ளிகளுக்கு வரும் 10ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையில் மரங்கள், மற்றும் சாலையோரம் லாரிகளில் பிரத்யேக வாகனங்களின் உதவியுடன் தண்ணீர் தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக   டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லி மாநிலம் முழுவதும்  தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் 10 ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில்,  தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கும் நிலையில், காற்று மாசு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் மாநில அரசுகள் சிரமங்களை எதிர்கொள்வதால், இதுகுறித்து விவாதிப்பதற்காக அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் மோடிக்கு வர்த்தகம் மற்றும் தொழில் துறை (சிடிஐ) கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து சிடிஐ-யின் தலைவர் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், ‘தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசு காரணமாக வியாபாரம் பெரியளவில் பாதித்துள்ளது. காற்று மாசு ஏற்படுவதை தடுக்க மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு இணைந்து கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் எங்களது வர்த்தகம் மேலும் பாதிக்கப்படும். டெல்லியில் காற்றின் தரம் கடுமையான நிலையை எட்டியதால், மக்கள் ஷாப்பிங் செய்வதை தவிர்த்து வருகின்றனர். பிற நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் டெல்லிக்கு வர விரும்புவதில்லை.

டெல்லியில் மட்டுமின்றி நொய்டா, ஃபரிதாபாத், குர்கான், சோனிபட் போன்ற நகரங்களிலும் காற்று மாசு அதிகமாக உள்ளது. டெல்லி அரசு முடிந்து வரை செயல்பட்டாலும், அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் மட்டுமே டெல்லியை காற்று மாசில் இருந்து விடுவிக்க முடியும். எனவே டெல்லி, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச அரசுகள் பங்கேற்கும் வகையில் காற்று மாசுக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கான அவசரக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.