ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதைத் தொடர்ந்து தலைமறைவில் இயங்கிவந்த தாலிபான் தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றத் தொடங்கினர்.

தலைநகர் காபூலை இன்று காலை சுற்றிவளைத்த தீவிரவாதிகள், ஆப்கான் அதிபர் மற்றும் அரசுத்தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி

வெளிநாட்டினரின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏதும் ஏற்படாமல் தாக்குதல் ஏதும் இன்றி ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் தாலிபான்களின் நெருக்குதலுக்கு அஞ்சி ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி தஜிகிஸ்தான் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காபூலில் உள்ள அமெரிக்கர்களை மீட்க ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அமெரிக்கா தரையிறக்கி இருக்கிறது.

இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க இன்று காலை டெல்லியில் இருந்துப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், காபூல் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் காத்திருந்தது.

விமான நிலையம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் செல்லும் நிலை ஏற்பட்டதால், ஒரு மணி நேர தாமதத்திற்குப் பின் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.

இதனைத் தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இன்றிரவு டெல்லி திரும்ப இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.