சென்னை:
மமுக கூட்டணியில் உள்ள ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் 3 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்து, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக எனப் பல முனைகளாக இந்தத் தேர்தலில் போட்டி நிலவுகிறது.

அமமுக கூட்டணியில், ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சி வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதேபோன்று, அமமுக கூட்டணியில், கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி, மக்களரசு கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக நேற்று அமமுக கூட்டணியில் இணைந்தது. அக்கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  இதனிடையே, கடந்த 12-ம் தேதி தொடங்கிய வேட்பு மனு, 19-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அமமுக கூட்டணியில் உள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று  அறிவித்துள்ளது. இதனை, அக்கட்சியின் தேசிய தலைவர் அசாதுதீன் ஒவைசியின் ஒப்புதலுடன் மாநில தலைவர் வக்கீல் அஹமத் அறிவித்துள்ளார்.

அதன்படி, வாணியம்பாடி தொகுதியில் மாநில தலைவர் வக்கீல் அஹமத், சங்கராபுரம் தொகுதியில் முஜிபுர் ரஹ்மான், கிருஷ்ணகிரி தொகுதியில் அமீனுல்லா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.