மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி இன்று திடீரென தொடங்கப்பட்டுள்ளது பரபரப்பைஏற்படுத்தி வரும் நிலையில், தேர்தல் வருவதால் எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுபோல மதுரை எம்.பி. வெங்கடேசனும் விமர்சனம் சய்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரியில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடிக்கல் நாட்டப்பட்டதோடு நிற்கிறது. மருத்துவமனைக்கு தோப்பூரில் ஒதுக்கப்பட்ட இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தையும், அருகில் உள்ள மதுரை-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையையும் இணைக்கும் நான்கு வழி இணைப்பு சாலை ஒன்றும் போடப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி தொடங்கப்படவில்லை. . இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜனவரியில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பயின்று வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 150 பேருக்கு போதிய இட வசதியும், மருத்துவ பயிற்சியும் கிடைக்காத காரணத்தால், அவர்களில் 100 பேரை மதுரைக்கு வாடகை கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பையும் சமீபத்தில் எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது.
அதனால், பழையப்படி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகப் பணிகள் சுறுசுறுப்படைந்தநிலையில் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இன்று திடீரென எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான பூஜைகள் நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கியுள்ளது என விமர்சித்துள்ளார்.
மேலும், மத்திய அரசின் எந்தத் திட்டத்திற்கு திமுக அரசு முட்டுக்கட்டை போட்டு இருக்கிறது என குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என பிரதமர் மோடியை சாடியவர், எடுத்தோம், கவிழ்த்தோம் என பெரிய பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவது சரியல்ல; அச்சம் ஏற்பட்ட காரணத்தினால்தான் ஒரே வாரத்தில் 2 முறை தமிழ்நாடு வந்து செல்கிறார் பிரதமர் என்றார்.
அதுபோல எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மதுரைக்கு வந்தார். அப்பொழுது அவரை வைத்து துவக்கி இருக்கலாம். அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திட்டத்தின் துவக்க நிகழ்வுக்கும் இடையே 5 ஆண்டு என்ற புதிய சாதனையை தேசம் அறிந்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.