டில்லி
அகில இந்தியத் தொழில் நுட்பக் குழு வரும் கல்வி ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
பொறியியல் கல்லூரியில் தற்போது ஆங்கில மொழியில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகப் பள்ளிகளில் ஏராளமானோர் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் ஆவார்கள். இதைப் போல் பல மாநிலங்களிலும் ஏராளமானோர் தாய்மொழி வழியில் கல்வி பயின்றுள்ளவர்கள் ஆவார்கள்.
இவர்களுக்கு ஆங்கில மொழியில் பாடங்களைப் படிப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. இந்த மொழி பிரச்சினை காரணமாக பல மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர ஆர்வம் காட்டுவதில்லை. பல மாணவர்கள் ஆங்கில மொழிக்கு அஞ்சி இடையில் படிப்பை நிறுத்தும் நிலையும் ஏற்படுகிறது.
இதையொட்டி அகில இந்தியத் தொழில்நுட்ப குழு வரும் கல்வி ஆண்டு முதல் 7 மொழிகளில் பொறியியல் பாடங்களை நடத்த அனுமதி அளித்துள்ளது. அவை தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், வங்க மொழி ஆகும். மேலும் 11 மொழிகளில் பொறியியல் பாடங்களை மொழி மாற்றவும் திட்டமிட்டுள்ளதாகக் குழு கூறி உள்ளது.