2022 ம் ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று துவங்கியது.

திமுக அரசை கண்டித்து ஆளுநர் உரையில் பங்குபெறாமல் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவரும் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி :

திமுக ஆட்சியில் பெண்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இந்த எட்டு மாத காலத்தில் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் கட்டப் பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தமிழக காவல்துறை தமிழக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது.

விசாரணை என்ற பெயரில் காவல்துறையால் அதிமுக நிர்வாகிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு போட்டு துன்புறுத்துகிறது.

வடகிழக்கு பருவமழையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு மற்றும் பால் கிடைக்காமல் குழந்தைகளும் பெரியவர்களும் திண்டாடினர்.

பருவமழை தொடங்குவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகளை திமுக அரசு செய்யவில்லை.

வெள்ள நீரால் நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை.

2015 ல் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது அதிமுக அரசு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ஆனால் திமுக அரசு எந்தவிதமான நிவாரணத் தொகையும் வழங்கவில்லை…

தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட தமிழக மக்களுக்கு ரூ. 2500 கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் பொங்கல் பரிசாக பணம் ஏதும் வழங்கப்படவில்லை இது தமிழக மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நம்பி கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்ற 48 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 13 லட்சம் பேர் மட்டுமே நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கூறி ஏமாற்றி உள்ளது இந்த அரசு.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த பகுதிகளிலேயே அமைக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளை காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு மூடியுள்ளது.

திமுக அரசின் இந்த செயல்பாடுகளை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.