நாகர்கோவில்: வெயிலைவிட கொடுமையானது அதிமுக ஆட்சி” என குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற  இன்னும் சில நாட்களே உள்ளன. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  ஸ்டாலின் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  இன்று (30.03.2021) கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காஙகிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கும், நாகர்கோவில் திமுக வேட்பாளர் சுரேஷ்ராஜன் குமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
அப்போது பேசிய ஸ்டாலின், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் நிற்பதை பார்த்தால் தற்போதைய ஆட்சியின் கொடுமையை விட இது ஒன்றும் பெரிது இல்லை என்பது போல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி இங்கே வந்திருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர் தற்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். அதனை சொன்னால் அவருக்கு கோபம் வரும். பாம்பு கடியில் உள்ள விஷத்தை விட துரோகத்தின் விஷம் கொடுமையானது. ‘கொளுத்தும் வெயிலை விட அதிமுக ஆட்சி மிகவும் கொடுமையானது.
திமுக வென்று ஆட்சிக்கு வந்தால் குமரி மாவட்டத்தில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட மாட்டாது. சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்பட்ட மாட்டாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்னாலும், தேர்தலில் அதிமுக வென்றால் மாற்றிப் பேசுவார்” என்றார்.
கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் சசிகலாவுடன் இருந்து அவருக்கு துரோகம் செய்து விட்டு பழனிசாமியோடு சேர்ந்து தற்போது வேட்பாளராகி இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு தளவாய் சுந்தரம் பா.ஜ.,வில் சேருவார்.
இலங்கை தமிழக மீனவர்கள் பிரச்னை இதுவரையிலும் தீர்த்து வைக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி நிலைநிறுத்திய பிறகு இவை அனைத்திற்கும் தீர்வு ஏற்படுத்தப்படும்.
பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பல வாக்குறுதிகளை அளித்தார், அதை எதையும் செய்யவில்லை அவர் பொன்.ராதாகிருஷ்ணன் இல்லை பொய் ராதாகிருஷ்ணன் என்று சொல்லவேண்டும்.

சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுகதான். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்ப்போம் எனக் கூறுகிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த அரசு ஆயிரம் ரூபாய் வழங்கியது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீதமுள்ள 4 ஆயிரம் ரூபாயை வழங்குவோம்.

நடக்கும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நமது மானத்தை, மரியாதையை காப்பாற்ற நடக்கும் தேர்தல், மதவெறி கொண்ட பா.ஜ.,வை விரட்டுவதற்கான தேர்தல்.

உரிமையை காக்க திமுக., உயிரை காக்க மாஸ்க். கூட்டமாக கூடும் இடத்தில் வரும் போது, அனைவரும் மாஸ்க் போடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.