சென்னை: மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தவில்லை என திமுக அரசு மீது குற்றம் சாட்டி வரும் அதிமுக,  திமுக அரசை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

அதிமுக-வின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே கடந்த 7ந்தேதி ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாள ராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், மக்களுக்கு விரோதமாக திமுக அரசு நடைபெற்று வருவதாவும், ஏற்கனவே கூறியபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம்சாட்டி, மாநிலம் முழுவதும் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, டிசம்பர் 9ந்தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், முப்படை தளபதி ஹெலிகாபடர் விபத்து காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதையடுத்து, டிசம்பர் 17ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள், மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள், முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் போராட்டங்கள் நடைபெறுகிறது.