சென்னை:
பாஜக குறித்த தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே; அதிமுக கருத்து அல்ல என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பெண்களை தனது படைப்பிரிவில் சேர்த்து பெருமைபடுத்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அதிமுக பாஜக கூட்டணி குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். ஏற்கனவே நிர்மலா சீத்தாராமன் அதிமுக, பாஜக இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியது, அத்வாலே கூட்டணி குறித்து பேசியது பற்றியும், தம்பித்துரையின் பேச்சு குறித்தும் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தற்போதுவரை எந்த கட்சியுடனோ, யாரோடனோ கூட்டணி வைக்கவில்லை; கட்சியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதிமுக – பாஜக கூட்டணி என ராம்தாஸ் அத்வாலே கூறிய கருத்தை நாம் எடுத்துக் கொள்ளத்தேவையில்லை என்றுவர், ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் இல்லை; அவர் பாஜக கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர் என்று விளக்கினார்.
மேலும், பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து தனிப்பட்ட கருத்தே , அதிமுகவின் கருத்து அல்ல என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், கண்மூடித் தனமாக யாருக்கும் நாங்கள் அடிமை சாசனம் எழுதி கொடுக்கவில்லை, அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது , அன்ன பறவை போல் பிரித்துப் பார்க்கும் என்று தெளிவுபடுத்தினார்.
கட்சி , ஆட்சி பற்றி நான் கூறினாலும் ஒரு வட்டத்தை தாண்டி என்னாலும் பேச முடியாது என்றவர், யார் , யார் பேசுவது அதிமுகவின் கருத்து என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாக பதிலளிக்காமல் மழுப்பினார்.
பாஜக குறித்த தனிப்பட்ட கருத்தே; அதிமுக கருத்து அல்ல: ஜெயக்குமார்