டில்லி:
டில்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவை, அ.தி.மு.க எம்.பி. சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் நடந்தது என்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
டில்லியிலிருந்து சென்னைக்கு செல்ல தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் நேற்று பிற்பகல் விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமரசப்படுத்தினர். இதனால் இருவரும் பயணத்தை ரத்து செய்து விட்டு  டில்லியில் உள்ள தங்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர்.
சசிகலா புஷ்பா, “விமான நிலையத்துக்கு நான் வந்த போது, அங்குள்ள காவலர்களிடம்  புரட்சித்தலைவியையும்  (ஜெயலலிதா) தமிழக அரசையும் சிவா கிண்டலாக பேசினார்.   இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டவே, . அவரது கன்னத்தில் ஓங்கி நான்கு முறை அறைந்தேன்”  என்றார்.
திருச்சி சிவா, “விமான நிலையத்தின் செக்கிங் பாயிண்ட்டில்  நிற்கும்போது, சசி்கலா புஷ்பா என் சட்டையை பிடித்து இழுத்து ஒரு முறை  அறைந்தார். இதனால் எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. எதற்காக இப்படி நடந்துகொண்டார் என்பது தெரியவில்லை. . இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்” என்றார்.

சசிகலா புஷ்பா - திருச்சி சிவா
சசிகலா புஷ்பா – திருச்சி சிவா

இது குறித்து டில்லி விமான நிலைய வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்:
“நேற்று மதியம் சுமார் 1.45 மணி வாக்கில் இந்த சம்பவம் நடந்தது. சசிகலா புஷ்பாவை, காவலர்கள், செக்கின் ஸ்கேனிங்கில் வரிசையில் நிற்கவைத்தனர். அதேநேரம் திருச்சி சிவாவை, உள்ளே அனுப்பிவிட்டனர்.
இதைப்பார்த்த சசிகலா புஷ்பா, “நானும் எம்.பிதானே.. என்னை மட்டும் வரிசையில் நிற்கவைத்து அவமானப்படுத்துகிறீர்களே..” என்று கேட்டிருக்கிறார்.
அப்போது திருச்சி சிவா, “தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி சலாம் போடுவீங்கன்னு நினைக்கிறாங்க போல” என்று காவலர்களிடம் சொல்லியிருக்கிறார்.
இதனால் ஆத்திரமான சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவின் சட்டையைப் பிடித்து அவரது கன்னத்தில் அறைந்திருக்கிறார். விநாடி நேரம் ஸ்தம்பித்த சிவா, உடனடியாக சுதாரித்துக்கொண்டு, பதிலுக்கு சசிகலா புஷ்பாவை அறைந்ததோடு, தள்ளிவிட்டிருக்கிறார். அதற்குள் விமான நிலைய காவலர்கள் வந்து இருவரையும் சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் அனைத்தும் விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.
சம்பவம் நடந்தபோது சசிகலா புஷ்பா மீது மது வாடை வீசியது” என்று டில்லி விமான நிலைய வட்டாரத்தில் விசாரித்தபேது நமக்கு தகவல்கள் கிடைத்தன.
“ ஜெயலலிதாவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, “திருச்சி சிவா, முதல்வரையும் தமிழக அரசையும் காவல்துறையையும் மோசமாக பேசினார்” என்றெல்லாம் சொல்கிறார்” என்று ஒரு கருத்து நிலவுகிறது.
1
அதே நேரம், “சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் சமீபத்தில் சமூகவலைதளங்களில் உலாவந்தன. பிறகு இவை மார்பிங் படங்கள் என்பது தெரியவந்தது. சசிகலா புஷ்பாவின் உட்கட்சி எதிரிகளே இப்படியோர் படத்தை சித்தரித்து வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இது போன்ற படங்கள் வெளியானதில் சிவாவுக்கு எந்தவித தொடர்பும் கிடையாது.
ஆனால் நேற்று நிதானத்தில் இல்லாத சசிகலா புஷ்பாவுக்கு இந்த படங்கள் நினைவுக்கு வந்திருக்கலாம். எதிரே திருச்சி சிவாவை பார்த்தவுடன்,  சட்டையைப் பிடித்து இழுத்து அடித்திருக்கலாம்.”  என்றும் ஒரு தகவல் உலவுகிறது.
ஏற்கெனவே தனது ஆண் நண்பருடன் மது குடித்தது பற்றியும் அதிமுக அரசை விமர்சித்தும் சசிகலா புஷ்பா பேசியதாக வாட்ஸ்அப்பில் ஒரு உரையாடல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல இவரது கல்வி சான்றிதழ்கள் குறித்த சர்ச்சையும் ஏற்பட்டது. இப்போது எம்.பியை அடித்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் சசிகலா புஷ்பா.
மொத்தத்தில் தமிழகத்தின் “பெருமை”  டில்லியில் மேலும் ஓங்கியிருக்கிறது.