ஆத்தூர்:

மறைந்த முதல்-வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24ம்ந் தேதி காவலாளியை கொன்ற கும்பல் ஜெயலலிதா அறையில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பலியானார்.

கனகராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் சந்தேகத்தை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபாலை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் வைத்து 4 மணி நேரம் விசாரணை நடந்தது.
கனகராஜ் அடிக்கடி கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியுடன் செல்போனில் தொடர்பில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை நாளை விசார ணைக்கு ஆஜராகுமாறு ஆத்தூர் போலீசார் நேரில் சம்மன் கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட அவர் இன்றே விசாரணைக்கு வந்தார்.

மாலை ஆறுகுட்டி எம்.எல்.ஏ ஆத்தூர் காவல்நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். ஆறுக்குட்டியிடம் விசாரணை அதிகாரி கேசவன் விசாரணை நடத்தினார்.