சென்னை: சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள அரசு   நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள 10.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசு நிலம், தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு  கடந்த பிப்ரவரி மாதம்  நடந்தேறிஹயுள்ளது. தற்போதைய  கோயம்பேடு பகுதியின் சந்தை மதிப்பு சதுர அடி 25 ஆயிரமாக உள்ளது. ஆனால், அரசு சதுர அடி,  12ஆயிரத்து 500 ரூபாய்க்கு குறைவான விலையில் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  நில ஒதுக்கீட்டுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு பல கோடி ருபாய் லஞ்சம் கைமாறியுள்ளதாகவும் , அரசு நிலத்தை அரசு பயண்பாட்டுக்கு மட்டுமே பயண்படுத்த வேண்டிய விதியை மீறியும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும் நிலம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஆளுனருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.