அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது.

கூட்டம் கூடுவதற்கு முன்னதாக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை விதிக்கக்கோரி ஓ.பி.எஸ். தரப்பு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.

பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக 7:15 மணிக்கு கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார்.

வழியெங்கும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.

இந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட ஓ.பி.எஸ். வானகரம் செல்லாமல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் சென்றார்.

அங்கு அதிமுக அலுவலகத்தை பூட்டிவிட்டு காவலுக்கு இருந்த எடப்பாடி ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ். தரப்பினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனை முறியடித்து தலைமை அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்தனர். இந்த சம்பவத்தால் ராயப்பேட்டையே போர் களம் போல் காட்சியளித்தது.

மோதல் சம்பவத்தை அடுத்து ஓ.பி.எஸ். தலைமை அலுவலகம் சென்றதும் இது குறித்து அறிந்த போலீசார் மோதலை தடுக்க அங்கு வந்தனர்.

அதேவேளையில், வானகரத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தவிர நான்கு மாதங்களுக்குள் பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கான நடைமுறைகள் குறித்தும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும், ஓ.பி.எஸ். வசம் இருந்த பொருளாளர் பதவி இனி பொதுச் செயலாளர் வசம் ஒப்படைக்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், அரசியல் அரங்கில் ஓ.பி.எஸ். தனித்து விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தை தாமாக முன்வந்து காலி செய்துவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திலும் ஓ.பி.எஸ். உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.