சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகோரிய ஓபிஎஸ் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்  ஒத்திவைத்தது.  அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளை மதியம் 2.15க்கு விசாரிப்பதாக நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

அதிமுக பொதுக்குழு வரும் 11ந்தேதி நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நிதிபதி முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. இபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும், தங்களது வாதங்களையும், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்து காரசாரமாக வாதாடினர்.

விசாரணையின்போது,  அதிமுக பொதுக்குழு நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு உயர்நீதிமன்றம் என்ன உத்தரவிட முடியும்? என்று ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம், தனி நீதிபதியை அணுகலாம் என கூறியுள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போது பொதுக்குழு கூட்டியது செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பொதுக்குழுவுக்கான அறிவிப்பில் முறையாக கையெழுத்து இல்லை என்றும், பொதுக்குழு குறித்த அறிவிப்பு  15 நாட்களுக்கு முன்பாகவே கொடுக்கப்பட வேண்டும் அதுதான் கட்சியின் விதி என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, எடப்பாடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  பொதுக்குழு வழக்கில் பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வேண்டும் என  கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், பொதுக்குழு தடை தவிர பிற கோரிக்கைகளுக்கு மட்டுமே ஐகோர்ட்டை நாட உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. போலீஸ் பாதுகாப்பு, விரும்பத்தகாத சம்பவங்களை தடுப்பது போன்ற கோரிக்கைகள் வைத்தால் ஆராயலாம் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியாவிட்டால் கட்சி செயல்படாதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதையடுத்து வாதாடிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், சட்ட விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், விதிகளை மீற வாய்ப்புள்ளது, அதனால் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதற்கு நீதிபதி,,  உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அங்குதான் செல்ல வேண்டும் மற்ற விவகாரங்கள் என எதை குறிப்பிட முடியும்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுனார். தொடர்ந்து காரசாமான விசாரணையைத் அடுத்து, ஜூன் 23ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை என்று  கூறிய நீதிபதி, பதவி காலாவதியாகவில்லை எனில் தலைமைக் கழக நிர்வாகிகள் எப்படி பொதுக்குழுவை அறிவிக்கலாம் என வினவினார்.

இதற்கு பதில் கூறிய எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், கட்சி விதிகளை திருத்தும் அதிகாரம் பொதுக்குழுவுக்குத்தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பும் தங்களுது வாதங்களை காரசாரமாக தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நாளை மதியம் 2.15க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.