டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்றுடன் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி 10ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 4ந்தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

முதல்நாளில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமர்வு, வழக்கை நேற்று ஒத்தி வைத்தனர். மீண்டும் நேற்று நடைபெற்ற விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்றைக்கு பொதுக்குழு தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். இன்றுடன் வாதங்களை முடிக்க அறிவுறுத்தி இருந்தனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று  3வது நாளாக   விசாரணை தொடங்கி நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது,  ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்து வருகிறார்.

இன்றைக்கு தேர்தல் நடந்தாலும் நான்தான் வெற்றி பெற்று ஒற்றைத் தலைமையாக அமர்வேன் என்றும், ஒன்றைகோடி தொண்டர்களின் ஆதரவு ஓபிஎஸ்.க்குதான் இருக்கிறது, அதிமுகவின் அடிப்படை நோக்கமே மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியதுடன், கட்சியின் முக்கிய விதிமுறைகளை அவசர கதியில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மாற்றி உள்ளனர் என்று கூறியதுடன், பொதுக்குழுவில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு எனக்கூறியது அதிகாரத் துஷ்பிரயோகம் என்று தெரிவித்தார். தன்னிச்சையான முறையில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமில்லை என்றுள்ளார். எனவே, பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 10 – ம் தேதி ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். அன்றைய தினம், எடப்பாடி தரப்பு வாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.