சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இன்று  இரங்கல் தீர்மானம், அவைத்தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அடுத்த அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ந்தேதி நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்  அறிவித்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையான நிலையில், இன்றைய பொதுக்குழு கூட்டத்தில்,  அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டார்கள். அனைத்தையும் நிராகரித்த அவர்களின் ஒற்றை கோரிக்கை ஒற்றைத்தலைமை. ஒற்றைத்தலைமை தீர்மானம் எப்போது அந்த தீர்மானங்களோடு இணைக்கப்படுகிறதோ, அப்போது மற்றொரு தலைமை பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டு பிற தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கேபி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் பேசினர்.

இதைத்தொடர்ந்து அதிமுக பொதுக்குழுவில் முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லத்தில் உதவியாக இருந்த ராஜம்மாள், தரங்கை கண்ணன், வாரிய தலைவர் அமிர்த கணேசன், தலைமை கழக ஊழியர் சாரால், திருச்சி- முன்னாள்  மேயர் ஜெயா உள்ளிட்ட தொண்டர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இரங்கல் தீர்மானத்தை செம்மலை வாசித்தார்.

தொடர்ந்து, அதிமுகவின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.  தொடர்ந்து தமிழ்மகன் உசேனுக்கு எடப்பாடி பொன்னாடை போர்த்தினார்.

இதைத்தொடர்ந்து அதிமுக அவைத்தலைவராக தேர்ந்தெடுத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக  தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டார்.

முன்னதாக பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி அவைத்தலைவரிடம் மனுக்கொடுத்தனர். ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கூறியதைத் தொடர்ந்து, மீண்டும் அதிமுக பொதுக்குழு அடுத்த மாதம் கூறும் என அறிவிக்கப்பட்டள்ளது.

இதற்கிடையில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை பொதுக்குழுவை விட்டு வெளியே போகச் சொல்லி முழக்கங்களை எழுப்பினர். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோரை எதிர்த்து முழக்கங்கள் கடுமையாக எழுப்பப்பட்டது.

 இதையடுத்து வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோர் மேடையிலிருந்து கீழே இறங்கினர்.