சென்னை: திமுக அதிமுக கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல், தலைவர் பதவிக்கு ஒரே கட்சியை சேர்ந்த இருவர் போட்டியிட்டால் ஏற்பட்ட சலசலப்பு,  மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு உள்பட பல்வேறு காரணங்காளல்,  பல பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை பிடிக்க திமுகவினர் முயன்றதால் ஏற்பட்ட மோதல் காரணமாக, போலீஸ் தடியடி நடத்தி திமுகவினரை விரட்டியடித்தனர்.. இந்த நிலையில் மேலும் பல பகுதிகளில் மோதல் ஏற்பட்டதால் தலைவர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் ஆம்பூர் நகராட்சி தலைவருக்கான தேர்தல் தற்காலிகமாக நிறுத்தம்.  திமுக தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து, திமுகவை சேர்ந்த மற்றொருவர் மனு தாக்கல்.  திமுகவை சேர்ந்த இரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கோவை வெள்ளலூர் பேரூராட்சி மறைமுக தேர்தலில் திமுக – அதிமுகவினர் இடையே வாக்குவாதம் – தள்ளுமுள்ளு  ஏற்பட்டது.  தொடர்ந்து  அதிமுக, திமுகவினர் இடையே பிரச்சினை எழுந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்படவதாக ஆணையாளர் அறிவித்தார்.

மதுரை திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  மறைமுக தேர்தலை பெரும்பாலான உறுப்பினர்கள் புறக்கணித்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் பேரூராட்சிக்கு வராததால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலை புறக்கணிக்கும் வகையில், உறுப்பினர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறை பூண்டியில் மா.கம்யூனிஸ்டு வேட்பாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்  நகர்மன்ற துணைத்தலைவராக போட்டியிட உள்ள நிலையில், அவர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதுமட்டுமில்லாமல், சில இடங்களில் பிரச்சனை காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமாரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர் சிவசங்கரை அதிமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்கக் கோரி திமுக, பா.ஜ.க,வினர் புகார் அளித்து சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது.

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்துள்ளார்.

பெரும்பாலான மேயர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் ஏற்பட்ட திடீர் போட்டியால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.