சென்னை: ஒத்தி வைக்கப்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (21ந்தேதி) நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. தமிழ்நாட்டில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்ட அதிமுக, தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. அதிக வாக்குகளை பெற புதிய கூட்டணியை உருவாக்க திட்டமிடப்பட்டு செயலாற்றி வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கூட்டியுள்ளார். தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து, மாவட்ட செயலாளர்கள் மூலமாகவே தேர்தல் களத்தில் வெற்றியை பெற வேண்டும் என்பதால் அவர்களை துரிதப்படுத்தவே நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில், அதிமுக தலைமையிலான கூட்டணியை உருவாக்குவதிலும் எந்த கட்சியை சேர்த்துக் கொள்ளலாம் எந்த கட்சி வேண்டாம், யாரை அணுகலாம் என்ற கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிகாரம் அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவை அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.