சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் 7ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை தடை செய்ய வேண்டும் என அதிமுக வில் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று பிற்பகல் நடைபெற்றது. வழக்கு விசாரணையின்போது, “விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. என்னை நீக்கிய பிறகுதான் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனது நீக்கம் செல்லாது என்பதால் வழக்கு தொடர்ந்துள்ளேன். என்னைப்போல 27,000 உறுப்பினர்கள் வழக்கில் இணைய தயாராக உள்ளனர் என்று கே.சி.பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழதுக்கில் இடையீட்டு மனுதாரர் பிரசாத் சிங் தரப்பு வழக்கறிஞர் வாதாடும்போது, அதிமுக விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி செய்வதாக புகார் கூறப்பட்டது.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, 2018ல் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எப்படி வழக்கு தொடரமுடியும் என கேள்வி எழுப்பினார். புகார் தொடர்பாக எதிர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் இடைக்கால உத்தரவு எப்படி பிறப்பிக்க முடியும், தற்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியது என்றனர்.
வழக்கில் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன் ஆகியோர், மூன்றாண்டுகளாக கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்றும், மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, சிவில் வழக்காக தொடர்ந்து, அதில் வெற்றி பெற்ற பின்னரே இந்த வழக்கை தொடர முடியும், அவர்களால் இன்று வாதாட முடியாது என்றும் வலியுறுத்தினர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் எதிர்த் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கு முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தயங்கமாட்டேன் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சட்ட விதிமீறல் இருந்தால் தேர்தலில் எந்த முடிவெடுக்கப்பட்டாலும் அதை ரத்துசெய்யவும் தயார்.
இதையடுத்து, அதிமுக தரப்பின் வேண்டுகோளை ஏற்று, மூன்று வாரம் பதிலளிக்க அவகாசம் வழங்கி,வழக்கை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
[youtube-feed feed=1]