சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தலில் விருப்பமனு விநியோகம் என்று தொடங்கி உள்ள நிலை யில், தேர்தலில் போட்டியிட விரும்பு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்பொடி பிரசாத் மீது, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் ஓம்பொடி சி.பிரசாத் சிங். தீவிர எம்ஜிஆர் ரசிகரான இவர், 1972ம்ஆண்டு அக்டோபரில் திமுகவில் இருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டது முதல், அவருடன் இருந்து வருகிறார். எம்ஜிஆரின் தீவிர விசுவாசிகளில் இவரும் ஒருவர். வட சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலராகவும், கட்சியின் தலைமைக் கழக பொதுக்குழு நியமன உறுப்பினராகவும், குடிசை மாற்று வாரிய உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் அஞ்சல் துறையின் ‘மை ஸ்டாம்ப்’ திட்டத்தின் கீழ், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதல்முறையாக அஞ்சல் தலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர்மீது அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தற்போது அதிமுக கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிடும் வகையில், சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்பு மனுவை கேட்டு வந்தார். அப்போது, அவரை அலுவலகத்தில் இருந்து வெளியேறும்படி சிலர் கூச்சலிட்டனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டு, சிறிதுநேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியதுஅவரை அங்கிருந்த சில குண்டர்கள் அவரை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஓமப்பொடி சி. பிரசாத்சிங், ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தூண்டுதலின் பேரிலேயே தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்ததுடன், கட்சி தொடங்கியதிலிருந்து உறுப்பினராக, தான் இருப்பதாகவும், தனக்கு விருப்ப மனு வழங்க மறுத்தால், எங்கே சென்று முறையிடுவது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் தன்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓமப்பொடி பிரசாத்சிங் புகார் அளித்துள்ளார்.