சென்னை: சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக தரப்பில் கவனஈர்ப்பு தீர்மானம் இன்று கொண்டுவரப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து பேசும்போது, சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரணை கைதி மரணம் குறித்து விளக்கம் அளித்தார்.

சம்பவத்தன்று தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸாா் புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னலில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த ஆட்டோவை மடக்கி அதில் இருந்த இளைஞா்களிடம்  விசாரணை செய்தனா். விசாரணையில் பிடிபட்டவா்கள் திருவல்லிக்கேணியைச் சோ்ந்த க.சுரேஷ் என்ற ஜொல்லு சுரேஷ் (28), பட்டினப்பாக்கத்தைச் சோ்ந்த விக்னேஷ் என்ற விக்னா (28) என்பதும் தெரிய வந்தது. இதில், சுரேஷ் மீது 2 கொலை வழக்குகள், 2 கூட்டு கொள்ளை வழக்குகள் உள்பட 6 வழக்குகள், விக்னேஷ் மீது 2 கொள்ளை வழக்குகள் உள்பட 4 வழக்குகளும் இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி, விக்னேஷ், வாந்தி எடுத்ததாகவும், பின் வலிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக காவல் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பிறகு, காவல்நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் உதவி ஆய்வாளர் புகழும்பெருமாள், காவலர் பொன்ராஜ் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில்,   தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானத்தின்மீது பேசிய  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கை ரூ. ஒரு லட்சம் கொடுத்து காவல்துறையினர் முடிவுக்கு கொண்டு வர முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நியாயமான விசாரணை மேற்கொள்ள இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

காவல் நிலையத்தில் ஏற்பட்ட லாக்அப் மரணத்தின் மர்மத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் விளக்குவாரா? அவர்கள் ஏதேனும் குற்றம் செய்திருந்தால், அவர்களை விசாரித்து, வழக்கு பதிவு செய்து முறைப்படி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். இது காவல்துறையினரின் கடமை. ஆனால் அவ்வாறு செய்யாமல், விக்னேஷ் காவல்நிலையத்தில் காவலர்களினால் தாக்கப்பட்டு, மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவின் ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்ற போது நாங்களே இதனை முதலில் சிபிசிஐடி வசமும், பிறகு அதனை சிபிஐ வசம் மாற்றினோம்.

காவலர் தாக்குதலில் இறந்த விக்னேஷ் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், மேலும் இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த அரசை வலியுறுத்துகிறோம். மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் கைது செய்தபோது, விக்னேஷ், கஞ்சா போதையில் இருந்தார் என்றும், காவல்துறை விசாரணைக்கு வர மறுத்ததுடன், போலீசாரை விக்னேஷ் கத்தியால் தாக்க முயன்றுள்ளார்  என்று தெரிவித்தார்.

மேலும், விக்னேஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது விக்னேஷ்க்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர் ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் உயிரிழந்தார் என்றும் விளக்கம் அளித்ததுடன்இ மரணம் அடைந்த விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், காயமடைந்த மற்றொரு நபர் சுரேஷின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்றும் கூறினார்.