சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில்  2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில், அது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.  அது தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே டெல்டா மாவட்ட விவசாயிகளிடம்   முதற்கட்ட கருத்துக் கேட்பு  நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில்,  மற்ற  மாவட்டங்களில் விரைவில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல்  கடந்த 2021ம் ஆண்டு முதல் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் போட்டு வருகிறது.  தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில், தமிழ்நாட்டில் வேளாண்மையை மேம்படுத்திட, நிதிகளை ஒதுக்கி, நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 5வது முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக,  விவசாயிகள், விவசாய சங்கங்கள், வேளாண் வல்லுநர்கள் மற்றும் தொடர்புடைய அனைவரின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதன்படி கடந்த நான்கு வேளாண்மை நிதி நிலை அறிக்கைகளில் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது.

அதன்படி,  இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட  2025-26 வேளாண்மை நிதி நிலை அறிக்கையை தொடர்பாக,  அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வடிவமைத்திட வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில்  கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முதற்கட்டமாக, கடந்த 14.02.2025 (வெள்ளிக்கிழமை) அன்று டெல்டா மாவட்டங்கள் உள்ளடக்கிய எட்டு மாவட்டங்களின் விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள், துறை சார்ந்த தலைவர்கள், வேளாண் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினரின் கருத்துக்கேட்புக் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில், 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களையும், தேவைகளையும் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மற்ற மாவட்ட விவசாயிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்ற உள்ளது.

 25.02.2025 (செவ்வாய்கிழமை) தலைமைச் செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர், நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், மீன்வளம்-மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகியோர் தலைமையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.

26.02.2025 (புதன் கிழமை) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு கலையரங்கத்தில், நகராட்சி நிர்வாகம், நகர்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

27.02.2025 (வியாழக்கிழமை) திருச்சி மாவட்ட கலையரங்கத்தில் நகராட்சி நிர்வாகம், நகர்பகுதி மற்றும் குடிநீர்வழங்கல் துறை அமைச்சர், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் தலைமையிலும்,

28.02.2025 (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆகியோர் தலைமையிலும்,

02.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் தலைமையிலும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவசாயப் பெருமக்கள் மற்றும் வல்லுநர்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாயப் பிரதிநிதிகள் வேளாண்மை மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்கிட உள்ளனர். இந்நிகழ்வில், விவசாயிகளின் தேவைகளை விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள், துறை வல்லுநர்கள் மூலமாக நேரடியாகக் கேட்டறிந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கவும், அவற்றைச் செயல்படுத்தவும் வேளாண் உற்பத்தியை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திடும் வகையில் வேளாண்மை – உழவர் நலன் தொடர்பான நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.