அக்னிபத் திட்டம் தேசநலனுக்கு எதிரானது என்றும் இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது :

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டம் மிகவும் ஆபத்தானது என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராணுவப் பணி பகுதி நேரப் பணியல்ல என்றும் இது லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும் என்றும் அதனால் இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அக்னிபத் திட்டத்தில் ராணுவத்தில் சேர 17.5 வயது முதல் 21 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாத பயிற்சியுடன் நான்கு ஆண்டுகள் மட்டுமே ராணுவத்தில் பணியாற்ற முடியும். (அதாவது 21.5 வயது அல்லது 25 வயது முடிந்த நிலையில் ஓய்வுபெற நேரிடும்.)

தற்போது ராணுவத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 50,000 முதல் 60,000 பேர் வரை பணியில் இருந்து ஓய்வு பெரும் நிலையில், 2022 செப்டம்பர் முதல் இரண்டாண்டுக்கு ஒருமுறை 45000 முதல் 50000 இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள், இவர்களுக்கு அக்னிவீர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ராணுவ அலுவலர்களுக்கு கீழான இந்த அக்னிவீர் பதவியில் சேரும் வீரர்களுக்கு முதல் ஆண்டு மாதம் ஒன்றுக்கு ரூ. 30,000 சம்பளமாக வழங்கப்படும், இரண்டாம் ஆண்டு 33,000 ரூபாயும், மூன்றாம் ஆண்டு 36,500 ரூபாயும், நான்காம் ஆண்டு 40,000 ரூபாயும் சம்பளமாக வழங்கப்படும்.

இந்த சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் 30 சதவீதம் சேவை நிதிக்காக பிடித்தம் செய்யப்படும், அதாவது முதல் ஆண்டு ரூ. 1.08 லட்சம், இரண்டாம் ஆண்டு 1.18 லட்சம் ரூபாய், மூன்றாம் ஆண்டு 1.31 லட்சம் ரூபாய், நான்காம் ஆண்டு 1.44 லட்சம் ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

பிடித்தம் செய்யப்படும் சேவை நிதிக்கு சமமான தொகையை மத்திய அரசு தனது பங்காக அக்னிவீரர்களின் கணக்கில் வரவு வைக்கும். நான்கு ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் சேர்த்து 11.77 லட்சம் ரூபாய் அவர்களின் சேவை நிதியாக வழங்கும்.

அக்னிவீரர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சேவை நிதி தவிர ஓய்வூதியம் ஏதும் வழங்கப்படாது, இதன்மூலம் தற்போது வரை நடைமுறையில் உள்ள 15 ஆண்டுகள் வரை ராணுவத்தில் பணியாற்றலாம் என்ற நடைமுறை முடிவுக்கு வருவதுடன் ஓய்வூதியமும் நிறுத்தப்பட உள்ளது.

மேலும் நான்கு ஆண்டுகள் முடிந்ததும் அதில் 25 சதவீத வீரர்களுக்கு அதாவது சுமார் 12,000 பேருக்கு மட்டும் ராணுவத்தில் சேர வாய்ப்பளிக்கப்படும்.

இந்த திட்டம் குறித்த அறிவிப்பு ஜூன் 14 ம் தேதி வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

போராட்டம் வன்முறையாக மாறியதில் நாடுமுழுவதும் 12 ரயில்கள் எரிக்கப்பட்டன, 300 ரயில்கள் ரத்து செய்யப்பட்டது, போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு ஒருவர் பலியானார், பலர் காயமுற்றனர்.

இதனைத் தொடர்ந்து அக்னிவீரர்கள் தேர்வில் அதிகபட்ச வயதை இந்த ஆண்டு மட்டும் 23 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இந்திய விமானப்படை சார்பில் வரும் 24 ம் தேதி நடைபெறும் ஆட்சேர்ப்பு முகாம் அக்னிபத் திட்டத்தின் கீழ் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் மாறுதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் பொதுமக்களின் கருத்து கேட்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.