அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டம்.

புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும், அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். சிவன் அக்னிதேவன் முன் தோன்றி, “இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும், அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும்” என்றும் வரமளித்தார். அக்கினி வழிபட்ட தலமாதலின் கோயிலுக்கு “அக்னீஸ்வரம்” என்பது பெயர். அக்னி தீர்த்தம் இன்று கிணறு வடிவில் உள்ளது. இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுதல் சிறப்பென்பர்.

உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்குரியதாகப் பூத்துவந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன் பறித்துவந்து தர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்தமனைவி அம்மலரைச் சிவபெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர். இறைவனைத் திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி ஆகியோர் வழிபட்ட தலம். இக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது. சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் காலத்தில் கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்விரு கல்வெட்டுக்களில் அம்மன் பெயர் “அழகமர்மங்கை” எனக் குறிக்கப்படுகிறது. நான்கு கால நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன.  

மேலைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும் இத்தலம் காவிரி தென்கரை தலங்களில் ஒன்று. இங்குத்தான் குடமுருட்டியாறு பிரிகின்றது. முதல் ஆதித்திய சோழனின் காலத் திருப்பணியைப் பெற்ற கோயில். மேலைத் திருக்காட்டுப்பள்ளி சிவாலயம் 5 நிலை கோபுரத்துடனும், ஐந்து பிரகாரங்களைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் தீயாடியப்பர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளப்பகுதியில் இருக்கிறது. இத்தலத்தில் அக்னி பகவான் இறைவனை வழிபட்டதால் கோயிலுக்கு “அக்னீஸ்வரம்” என்பது பெயர். 

மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. இலிங்கத்தின் சிரசின் மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றம் காணலாம். மூலவர் சற்றே தாழ்வான பள்ளத்தில் உள்ளார். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்து தான் இறைவனை வழிபட வேண்டும். மூலவரைச் சுற்றி வரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். இலிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் தனி சந்நிதியில் காணப்படுகிறார்.   

இலிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்த நாரீஸ்வரர் உள்ளார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப் பெருமானுள்ளார். பக்கத்தில் காசி விசுவநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் ஆகிதவையும் உள்ளன. இறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவிற்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது.  

பிரம்மாவிற்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணுவிற்கு தனி ஆலயமில்லை. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்ணு ஸ்ரீனிவாசப் பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள் புரிகிறார். 

இத்தலத்திலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் இரண்டு தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். குரு தட்சிணாமூர்த்தியின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே மற்றொரு தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. நித்திய வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன. நவக்கிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன. 

திருவிழா:

மாசி மகம், பங்குனிப் பெருவிழா, சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும், செல்வச்செழிப்புடன் திகழவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். 

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகியநாட்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் எய்துவர்.