சந்தேகப்படும் நபர்களை சித்ரவதை செய்து உண்மையை வரவழைக்க முயல்வது இனி பயன்தராது: அமித் ஷா பேச்சு

Must read

குற்றவாளிகளையும் குற்றவியல் மூளை கொண்டவர்களையும் விட காவல்துறை நான்கு படிகள் முன்னால் இருக்க வேண்டும் என்றும், சந்தேகப்படும் நபர்களை சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயற்சிப்பது போன்ற காவல்துறையின் பழமையான உத்திகள் இனி பயன்தராது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காவல்துறை ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் 50வது நிறுவன நாள் விழா தில்லியில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு காவல்துறை அமைப்புகளின் உயரதிகாரிகளிடையே பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “காவல்துறை செயல்படும் முறையை வகுக்கும் அமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு பி.பி.ஆர்.டி.யை நான் கேட்டுக் கொண்டுள்ளேன். ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றவியல் வழக்குகளில் தடயவியல் ஆதாரத்தை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

மேலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் தேவையான மாற்றங்களை உருவாக்க தேசிய அளவில் ஆலோசனைகளை நடத்துமாறு பி.பி.ஆர்.டி. அமைப்பை நான் கேட்டுள்ளேன். அதன்படி பெறப்படும் அனைத்து ஆலோசனைகளும் ஆவணங்களாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அவற்றின் மீதான பரிந்துரைகள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட வேண்டும்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்திலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் நீண்ட காலமாக மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனவே நாம் இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நாட்டில் குற்றவியல் வழக்குகளில் நீதிமன்றத்தால் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் விகிதம் மிகவும் குறைவாகவும், கவலை தரும் வகையிலும் உள்ளது. இந்தக் காலகட்டத்தில் இது இப்படி இருக்கக் கூடாது. இதை சரிசெய்ய வேண்டியுள்ளது. புலன்விசாரணைகளில் தடயவியல் ஆதாரம் உதவியாக இருந்தால்தான் இதை சரிசெய்ய முடியும்.

ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகைக்கு ஆதரவாக தடயவியல் ஆதாரம் இருக்கும்பட்சத்தில் அப்போது நீதிபதிக்கும், எதிர்தரப்பு வழக்குரைஞருக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்காது. அந்தச் சூழலில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு தண்டனை விதிப்பது உறுதியாகி விடும். இதன் மூலம், குற்றம் உறுதிப்படுத்தப்படும் விகிதம் தானாகவே மேம்படும்.

குற்றவாளிகளையும் குற்றவியல் மூளை கொண்டவர்களையும் விட காவல்துறை நான்கு படிகள் முன்னால் இருக்க வேண்டும். அதாவது அவர்களை விட பின்தங்கிய நிலையில் போலீஸார் இருக்கக் கூடாது. விரிவான முறையில் காவல்துறையை நவீனப்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம். சந்தேகப்படும் நபர்களை சித்திரவதை செய்து உண்மையை வரவழைக்க முயற்சிப்பது போன்ற காவல்துறையின் பழமையான உத்திகள் இனி பயன்தராது. நாம் புலன்விசாரணையில் அறிவியல்பூர்வமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். தொலைபேசி ஒட்டுக் கேட்பும் எந்தப் பலனையும் தராது.

அதேசமயம், குற்றங்களை முன்கூட்டியே தடுக்க காவல்துறை விரும்பினால், குற்றங்கள் தொடர்பாக தகவல் கொடுப்பவர்களைப் பயன்படுத்திக் கொள்ளும் இன்ஃபார்மர் நடைமுறை, குறிப்பிட்ட சில போலீஸாருக்கு பணியாற்ற ஒதுக்கப்படும் பீட் போன்ற பழங்கால நடைமுறைகளை மீண்டும் கொண்டுவர வேண்டியது அவசியம்.

காவல்துறைக்கான தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட உள்ளது. அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும். 12ஆம் வகுப்பை முடித்த எந்த மாணவராவது எதிர்காலத்தில் காவல்துறையில் பணியாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தால் அத்தகைய மாணவர்களுக்கு இக்கல்லூரிகளில் பயிற்சி அளிப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக பி.பி.ஆர்.டி. அமைப்பு உத்தேச முன்மொழிவை அரசுக்கு அனுப்பியுள்ளது. அதை இன்னும் சில தினங்களில் மத்திய அமைச்சரவையின் முன் பரிசீலனைக்கு வைப்போம்.
தடய அறிவியல் சோதனைக் கூடங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதோடு அதை சட்டரீதியில் கட்டாயமாக்கவும் வேண்டும்.

அவ்வாறு செய்த பின் குற்றவாளிகளை தண்டிப்பதில் அதிக வெற்றி கிடைக்கும். அதன் மூலமாகவே குற்றம் செய்யும் போக்கு குறையும்” என்று தெரிவித்தார்.

More articles

Latest article