சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில், மீண்டும் ‘மஞ்சப்பை’ திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை அமலில் உள்ளது. அதன்படி,  ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால்,  பொதுமக்களும், நிறுவனங்களும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று பரவி வந்ததால்,  பிளாஸ்டிக் மீதான தடையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதையடுத்து, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டைத் தவிர்க்கும் விழிப்புணர்வையும் அதற்கு மாற்றான துணிப்பைகளையும் நாமே உபயோகிக்கும் பழக்கத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும்  நோக்கில்  “மீண்டும் மஞ்சப்பை”  திட்டத்தை தமிழகஅரசு முன்னெடுத்து உள்ளது.

அதன்படி,  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” பரப்புரைக்கான நிகழ்ச்சியை, நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.