திருப்பதி
திருப்பதி செல்லும் அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
அடிக்கடி திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்னூல் மாவட்டம் ஆதோணியைச் சேர்ந்த கவுசிக் என்ற சிறுவன் சிறுத்தை கடித்து காயம் அடைந்தான். பிறகு நல்லூரைச் சேர்ந்த லக்ஷிதா என்ற சிறுமியைச் சிறுத்தை கடித்துக் கொன்றது.
வனத்துறையினரும், தேவஸ்தானமும் இணைந்து நடைபாதை ஓரம் கூண்டுகள் வைத்து 6 சிறுத்தைகளைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். திருப்பதி தேவஸ்தானம் மற்றும் அரசு வனத்துறை அதிகாரிகள் எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தாலும், வன விலங்குகள் காட்டில் இருந்து நடைபாதையை நோக்கி வந்து கொண்டே உள்ளன.
தற்போது அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தைகள் நடமாடுகின்றன. சில நாட்களுக்கு முன்பு அலிபிரி நடைபாதையில் சிறுத்தை ஒன்று நடமாடி உள்ளது. எனவே மலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்குச் சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை விடுத்து பக்தர்கள் கூட்டமாக நடந்து செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளது.