சென்னை: மின் இணைப்புடன் ஆன்லைனில் ஆதார் எண் இணைத்தவர்கள் மீண்டும் நேரில் வந்து இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மின்நுகர்வோர் களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக தொழில்நுட்ப காரணமாக டேட்டா அழிந்துபோய்விட்டது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் வீடுகள், விவசாயம், குடிசை வீடுகள், விசைத்தறி என மானியம் பெறும் மின் இணைப்புகள் 2.67 கோடி உள்ளன. இவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மானியம் பெறும் திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது.  இதை முறைப்படுத்தும் வகையில்,  தமிழ்நாடு அரசு, மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தியது.

அதற்கான இணையதள முகவரியும் கொடத்து, ஆன்லைன் மூலம் இணைக்கலாம் என்றும், அல்லது மின்சார வாரியத்தின் சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, அதன்மூலம் செலுத்தலாம் என அறிவுறுத்தி இருந்தது.  அதன்படி மாநிலம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த நிலையில்,   ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்த பலரின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.  அதன்படி,   டிசம்பர் மாதம் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்தவர்களின் தகவல்கள் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தகவல்கள் அழிந்து போன நுகர்வோரின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும்,  விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அத்தகைய மின் நுகர்வோர்மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றுஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதே சமயம், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்