சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையிலான தடுப்பூசி செலுத்தும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.  சென்னையில் உள்ள 200 வார்டுகளில் தினசரி தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது சிறப்பு முகாம்கள் அமைத்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே 2முறை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், நாளை மீண்டும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளில்  1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் 26.08.2021 அன்று நடைபெற்ற 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கும், 12.09.2021 அன்று நடைபெற்ற 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகளும், 19.09.2021 அன்று நடைபெற்ற 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 2,02,931 கோவிட் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் பொழுது பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயனடைகின்றனர்.

எனவே, வருகின்ற 26.09.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மீண்டும் நடைபெற உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 26.09.2021 அன்று நடைபெறவுள்ள 1,600 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 – 2538 4520, 044 – 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.