சென்னை

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு அடுத்தபடியாக ஜெயகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீது எழுந்த லஞ்ச புகாரின் அடிப்படையில் அவருடைய இல்லம் உள்ளிட்ட 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.   அப்போது ரூ.13 லட்சம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கிடைத்தன.  இந்த சோதனைக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் நேற்று தேசிய வர்த்தகர்கள் முன்னேற்றப் பேரவையின் இரண்டாம் ஆண்டு விழா நடந்தது.  இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர்  நாசர், மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர் கணபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

அமைச்சர் நாசர்

விழா முடிவில் அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம்,”திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு அறிவுறுத்தினோம். அதை, அதிமுக அரசு மறுத்தது. இப்போது, வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான முறையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதற்கு, அனைத்து மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு அடுத்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும்.  தங்கள் மீது தவறு இல்லை என நிரூபித்து அவர்கள் வெளியே வரட்டும்.  முறைகேடாகப் பல்லாயிரம் கோடி ரூபாய் சேர்த்துள்ளதால்தான் அவர்கள் மிகவும் பதறுகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.