சென்னை,

ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேச்சையாக களமிறங்கிய வெற்றி பெற்ற டிடிவி தினகரனின் ஆதரவாளர்களை இபிஎஸ்ஓபிஎஸ் இணைந்த அதிமுக அதிரடியாக நீக்கி வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் திமுக, அதிமுகவை விட அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இது அரசியல் கட்சியிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கிடையில், துக்கள் ஆசிரியரும், பிரபல ஆடிட்டருமான குருமூர்த்தி, ஈபிஎஸ்,ஓபிஎஸ் குறித்து ஆண்மை யில்லாதவர்கள் என்ற கருத்தில் டுவிட் செய்திருந்தார்.

குருமூர்த்தியின் டுவிட்டுக்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் சமூக வலை தளங்களிலும் கடும் கண்டங்கள் தெரிவிக்கப்பட்டன.

குருமூர்த்தியின் டுவிட்டுக்கு  தமிழக அமைச்சர்கள் பதிலும், அவர்களுக்கு குருமூர்த்தி பதில் என இந்த டுவிட் சர்ச்சையை அதிகப்படுத்தியது.

அதைத்தொடர்ந்தே அதிமுகவில் களையெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக நேற்று முன்னாள் எம்எல்ஏ உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து இன்றும் களையெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக
தருமபுரி, புதுக்கோட்டை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி மாவட்ட, ஒன்றிய, பேரூர் அதிமுக நிர்வாகிகளாக இருந்த 19பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் 49பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதேபோலத் திருப்பூர் மாவட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி உட்பட 66பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

குருமூர்த்தியின் அதிரடியான டுவிட்டுக்கு பிறகே ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக விழித்து கொண்டுள்ளதாகவும், டிடிவி ஆதரவாளர்கள் மீதான  இந்த நடவடிக்கையை தேர்தலுக்கு முன்பே எடுத்திருந்தால் ஆர்.கே.நகர் கையைவிட்டு நழுவியிருக்காது என்று சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.