டில்லி
தனிமனித உரிமை மீறல் கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பை தொடர்ந்து ஆதார் தனிமனித உரிமை மீறல் செய்கிறது என்னும் வாதம் வலுத்துள்ளது.
உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அந்தரங்கம் என்பது அவரவர் தனி உரிமை, அதை மீறக் கூடாது என தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் பத்திரிகையாளர் கூட்டத்தில் தனது ஆதார் கார்டையும் எடுத்து வந்து சுமார் 15 நிமிடங்கள் விளக்கம் அளித்தார். அப்போது, ”இந்த கார்டில் என் தந்தையார் பெயர் இல்லை, எனது கல்வித் தகுதி குறிப்பிடப் படவில்லை. எனது வருமானம், எனக்குள்ள நோய்கள், எனது மதம், எனது சமுதாய நிலை போன்ற எவையும் இதில் காணப்படவில்லை. இந்த ஆதார் குறைந்த தகவல், அதிகப் பயன் என்னும் கொள்கையில் உபயோகப் படுத்தப் பட்டுள்ளது” என கூறி உள்ளார்.
அமைச்சர் கூறியதில் பல தவறுகள் உள்ளன. தந்தை பெயர் விலாசம் மட்டும் அல்ல, கைரேகைகளும், விழிகளின் புகைப்படங்களும் கூட ஆதாரில் பதிவாகி உள்ளது அதனால் அமைச்சரின் இந்த விளக்கத்துக்கு அறிஞர்கள் பலரும், பொது மக்களும், வழக்கறிஞர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
”ஆதார் கார்டில் பல விவரங்கள் குறிப்பிடாத போதிலும், அதை பல நலதிட்டங்கள், மற்றும் வரிக் கணக்குகள், வங்கி கணக்குகள் ஆகிய இடங்களில் சேர்க்க வலியுருத்தப்பட்டுள்ளது. எனவே, அனைத்து விவரங்களையும் அரசு அறிந்துக் கொள்ள முடியும். பல மாநில அரசுகள் ஆதார் மூலம் மக்களின் விவரங்களை ஏற்கனவே அறிந்து ஒரு டேட்டா பேஸ் தயார் செய்துள்ளனர்” என பல மக்கள் தெரிவிக்கின்றனர்.
உச்ச நீதி மன்றம் அளித்த இந்த தீர்ப்பின் மூலம் ஆதார் வழக்கின் அடுத்தடுத்த வாதங்களில் ஆதாருக்கு எதிர்ப்பு வலுவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.