சென்னை
பெங்களூரு மெட்ரோவை தொடர்ந்து சென்னை மெட்ரோவிலும் தற்போது தமிழ் மற்றும் ஆங்கில போர்டுகள் மட்டுமே வைக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இதில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கி.மீ வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை கடந்த 2015ம் ஆண்டு ஜுன் 29ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ரயில் நிறுத்தங்களில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் ரயில் நிலைய பெயர்கள், ரயில் நிற்குமிடத்தின் இருபுறங்களில் வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சேவை தொடங்கப்பட்ட விமான நிலையம் – சின்னமலை வழித்தட ரயில் நிலையங்கள் மற்றும் கடந்த மே மாதம் சேவை தொடங்கப்பட்ட திருமங்கலம் – நேரு பூங்கா வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இந்தி மொழியில் பெயர்கள் எழுதப்படவில்லை. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு பலகைகள் இருக்கின்றன.
ஆகவே, “தமிழகத்தில் ஒருசில மெட்ரோ ரயில் நிலையங்களில் மும்மொழிக்கொள்கையையும், மற்ற ரயில் நிலையங்களில் இரு மொழிக்கொள்கையையும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கடைபிடிப்பது தவறு.
“நாள்தோறும் சுமார் 1.5 லட்சம் பயணிகள் பயணிக்கும் வசதி கொண்ட மெட்ரோ ரயில்களில் சுமார் 10 முதல் 15 ஆயிரம் பேர் வரையே பயணிக்கிறார்கள். அதிலும் மிகக்குறைவாகவே வட மாநில பயணிகள் பயணிக்கிறார்கள். அவர்களில் ஆங்கிலம் தெரியாதவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள்.
ஆகவே இந்தி தேவையில்லை” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர்.
இதற்கு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்த இந்தி பெயர்கள் அறிவிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இனி தமிழ் ஆங்கிலம் மட்டுமே பெயர்கள், அறிவிப்புகள் இருக்கும் என்று நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவழியாக மெட்ரோ மொழிக்கொள்கை குழப்பம் முடிவுக்கு வந்தது