வேலூர்: 90ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் காரணமாக 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பாலாற்றின் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஓடும் பாலாற்றில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த ஆறு, கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி ஆந்திரப்பிரதேசம் வழியாக தமிழகத்திற்குள் நுழைகிறது.
இந்த ஆற்றில் ஓடும் தண்ணீர், தமிழகத்தின் வடமாவட்டங்களான வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டம் உள்பட பல பகுதிகளின் விவசாயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு தொடங்கி மழை பெய்து வரும் நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல ஏரிகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் கனமழை பெய்து வருவதால், பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீரானது, ஆந்திர மாநிலத்தில் உள்ள புல்லூர் தடுப்பணையில் சேமிக்கப்பட்டு, அது நிரம்பியதும், அங்கிருந்து பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம், ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளமும்,வெள்ளமும் பாலாற்றில் கலந்து பெரு வெள்ளமாக பாய்ந்தோடுகிறது. இதனால், காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளில் உள்ள தரைப்பாலம் முழுமையாக மூழ்கியுதுடன், பாலத்திற்கு மேலேயே 3 அடி முதல் 4 அடி வரை தண்ணீரை கரைபுரண்டு ஓடுவதால், பல பகுதிகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் 30 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
வரலாறு காணாத இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அதேபோல வாலாஜாபாத் பாலாற்றின் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி உள்ளது. நிரம்பியுள்ள தரை பாலத்தின் மேல் நீர் இடுப்பு அளவிற்குச் சென்று கொண்டிருக்கிறது. அதேபோல ஆற்றிலிருந்து நிரம்பிய வரும் நீரானது வெளியேறி வாலாஜாபாத்தில் புகுந்துள்ளது . வாணியம்பாடி முதல் காவேரிப்பாக்கம் வரை கனமழையால், பாலாற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தினால், பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
விரிஞ்சிபுரம் பாலாற்று தரைப்பாலம் மீண்டும் மூழ்கி போக்குவரத்து தடைபட்டது. ஒடுக்கத்துார்- பாக்கம் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைந்து விழுந்தது. வேலுாரில், சேண்பாக்கம், திடீர்நகர், பாலாஜிநகர், கன்சால்பேட்டை, குமரப்ப நகர், சத்துவாச்சாரி, காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
வரலாறு காணாத வெள்ளத்தை பார்ப்பதற்காக ஆர்வமுடன் பொது மக்கள் அவ்விடத்தில் கூடி உள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் தவித்து வருகின்றனர்.