புவனேஸ்வர்

டிசா மாநிலம் புவனேஸ்வர் புறநகரில் உள்ள கோவிலில் 9 ஆண்டுகளுக்கு முன் திருடிய நகைகளைத் திருடியவன் தற்போது திரும்பக் கொடுத்துள்ளான்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரின் புறநகர்ப்பகுதியான கோபிநாத்பூர் பகுதியில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது.  இங்குக் கடந்த 2014 ஆம் வருடம் ஒரு திருடன் கோவிலில் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்றுள்ளான்.   தற்போது அந்தப் பொருட்களை மன்னிப்பு கடிதம் மற்றும் அபராதப் பணத்துடன் திருப்பி அளித்துள்ளான். 

அந்த மன்னிப்புக் கடிதத்தில் அந்த திருடன், தாம் கடந்த சில நாட்களாக பகவத் கீதை புத்தகத்தைப் படிக்கத்  தொடங்கி உள்ளதாகவும் தனது தவறான செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மேலும் தனக்குக் கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்துவதால் மனம் திருந்தி இந்த வெள்ளிப்  பொருட்களைக் கோவிலுக்கே திருப்பி கொடுப்பதாகவும் எழுதி உள்ளான்.

 

இந்த கடிதத்துடன் உள்ள பையில் வெள்ளிக் கிரீடம், காதணிகள், கையணிகள் மற்றும் வெள்ளிப் புல்லாங்குழல் ஆகியவை உள்ளன.  இந்தப்பையைத் திருடன் அந்த கோவிலில் அர்ச்சகர் வீட்டு வாசலில் வைத்து விட்டு சென்றுள்ளான்,   அத்துடன் கோவில் அர்ச்சகருக்குத் தட்சணையாக ரூ.200 மற்றும் தனது திருட்டுக்கு அபராதமாக ரூ.100 என ரூ.300 ஐ வைத்துச் சென்றுள்ளான்.

ஒடிசாவில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திருந்தித் திருடிய பொருட்களை கோவிலுக்குத் திரும்பக் கொடுத்த திருடனைப் பற்றி அனைவரும் பேசிய வண்ணம் உள்ளனர்.