கொரானா பொதுமுடக்கத்தில் இருந்து, பல்வேறு தளர்வுகளை தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதன்படி, இன்று முதல் வழிப்பாட்டுத் தலங்கள், பொது போக்குவரத்து, மால்கள் உள்பட பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது.
இதனால் இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கி உள்ளன. சென்னையில், இன்று 3,300 பஸ்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் பஸ்கள் இன்று மூதல் இயங்கும் என மாநில போக்குவரத் துத் துறை அறிவித்து உள்ளது. ஒவ்வொரு பேருந்துகளிலும், 24 பேர் மட்டுமே பயணிக்க முடியும் என்றும், பயணிகளுக்கு முகக்கவசம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் பஸ்களில் பின்பக்க மாக ஏறி முன் பக்கமாக இறங்க வேண்டும். பின்பக்கம் ஏறும்போது பட்டிக்கட்டின் பக்கவாட்டில் கிருமிநாசினி வைக்கப்பட்டு இருக்கும். பயணிகள் அந்த கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், பயணிகள் கண்டிப் பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகள் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும், பயணிகள் பஸ்களில் இருந்து எச்சில் துப்புவதற்கும் அனுமதிக்கப்படுவது இல்லை.
இதே போன்று, பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் கைகளில் கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு தான் பஸ்களை இயக்க வேண்டும். மேலும், பஸ்கள் பணிமனைகளில் இருந்து புறப்படும் போதும், இரவு பணிமனைக்கு வரும் போதும் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும் என்றும், பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பஸ் நிலையங்களில் வைத்து கிருமிநாசினி தெளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இன்றுமுதல் தமிழகம் முழுவதும் அனைத்து வழிப்பாட்டுத் தலங்களும் அதிகாலை முதலே திறக்கப்பட்டுள்ளன. சென்னையின் பிரபலமான கபாலீஸ்வரர், வடபழனி முருகன் கோவில் உள்பட அனைத்து கோயில்களும் திறப்பப்பட்ட வழிபாடுகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் சமூகஇடைவெளியுடன், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பழனி, திருச்செந்தூர், திருத்தணி முருகன் கோவில்களில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
5 மாதங்களாக வீடுகளிலேயே முடங்கி கிடந்த மக்கள் தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.