நெல்லை: 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக தென்மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தென்மாவட்ட மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த 32 ஆண்டுகளுக்கு , ராகுலின் தந்தை ராஜீவ்காந்தி, இதுபோல தென்மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவருக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பைப்போல, தற்போது ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் அன்பில் திளைத்த ராகுல்காந்தி, மக்களை சந்தித்து அளவளாவி தனது மகிழ்ச்சியை  நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்.

100 ஆண்டு பாரம்பரியமிக்க  காங்கிரஸ் கட்சிக்கு தென்மாவட்டங்களில் எப்போதும் தனி செல்வாக்கு உண்டு. தமிழக அரசியலில் காமராஜர் இருக்கும் வரை தனி மரியாதை உண்டு. பின்னர், காங்கிரஸ் உடைந்து பிரச்சினைகள் ஏற்பட்டாலும், இந்திரா காந்தி மறைவுக்கு பிறகு, அவரது மகன் ராஜீவ்காந்தியின் சுறுசுறுப்பானசெயலாற்றாலால்,  காங்கிரஸ் இமேஜ் மீண்டும் உயரத்தொடங்கியது.

குறிப்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக வாழப்பாடியார் இருந்தபோது, ராஜீவ்காந்தியின் தமிழக சுற்றுப்பயணங்களின்போது, ராஜீவ்காந்தி மக்களிடையே நெருங்கி பழகும் தன்மையும் , வாகனத்தை அவரே இயக்குவதும், பலரையும் சிலிர்க்க வைத்தது. குறிப்பாக அவரது தென்மாவட்ட பிரசாரங்களின்போது ராஜீவ்காந்திக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிட்டியது.

அதுபோல, தற்போது, சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ராகுலின் தென்மாவட்ட பிரசாரத்தின்போதும், தென்மாவட்ட மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் திரளாக கலந்துகொண்டு, அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுத்தனர். ராகுல் செல்லும் இடம் எல்லாம், சாலையோரம் குவிந்த கிராம மக்கள் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.  கிராம மக்களின் அன்பில் திளைத்தராகுலும், அவர்களிடையே செல்ஃபி எடுத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.

1989ம் ஆண்டு தமிழகம் வருகைதந்த  ராஜீவ்காந்திக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பு உடன் வாழப்பாடியார்

இன்று 3வது நாளாக தென்மாவட்ட மக்களை சந்தித்து வரும் ராகுல் முதல் 2நாள் பயணகிள்ன் தூத்துக்குடி, திருநெல்வேலி  மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்த நிலையில், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், உப்பளத் தொழிலாளர்கள் என பலரையும் சந்தித்து உரையாடினார். அவர்களின் கஷ்ட நஷ்டங்களை கேட்டறிந்தார். ராகுலின் எளிமை,  வேறுபாடின்றி அனைவரிடமும் சகஜமாக பழகும் தன்மை அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் வரவேற்பை பெற்றது. இதுமட்டுமின்றி, நெல்லையப்பர் கோவிலில் பட்டுசாத்தி விசேஷ பூசை செய்த ராகுல்காந்தி, நாசரேத்தில் பிரசித்தி பெற்ற தூய யோவான் தேவாலயத்துக்கு சென்று வழிபட்டார்.  இதுபோனற் நிகழ்வுகள் தென்மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது.

கடந்த 2 நாட்களாக  பல 100 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் பயணித்து வரும்   ராகுலுக்கு இடையிடையே உள்ள கிராம மக்கள் பிரமாண்டமான வரவேற்பை கொடுத்து, அவரை திக்குமுக்காட வைத்தனர். பல்வேறு இடங்களில் மக்கள் மத்தியில் ராகுல் உரையாற்றியதும் மக்களுக்கு மகிழ்ச்சிடைய ஏற்படுத்தியது.

எநதவித பந்தா, பகட்டின்றி எளிமையான உடையில் சாதாரண இளைஞரைப்போல, ராகுலின் நடவடிக்கை அமைந்திருந்ததும்,  நாட்டின் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாதாரண மனிதனைப்போல எளிமையாக மக்களிடையே உரையாடியதும் தென்மாவட்ட மக்களிடையே  வியப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையினர், கருப்புபூனை பாதுகாப்பு கெடுபிடிகளை உதறித் தள்ளிவிட்டு, தன்னை நோக்கி வரும் மக்களை சந்தித்து, அவர்களிடம் கைகுலுக்கி, செல்ஃபி எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி இளைய சமுதாயத்தினரிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  தூத்துக்குடியில் இருந்து குரும்பூர், நாசரேத் வழியாக சாத்தான்குளம் பகுதிக்கு வந்த ராகுலுக்கு பல்வேறு கிராமங்களில் கிராமமக்களே ஒன்றுகூறிவரவேற்பு கொடுத்தனர்.

சாத்தான்குளம் வரும் வழியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பன்னம்பாறை அருகே ராகுல் வந்தபோது, அந்த பகுதியில் சாலையோரத்தில் உள்ள ஒரே ஒரு சிறிய  டீக்கடையில் வாகனத்தை நிறுத்திவிட்டு, இறங்கி  டீ குடித்தார். அந்த பகுதியில் ராகுலுக்கு பன்னப்பாறை கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். சில இடங்களில் சாலையோர இளநீர் கடையில் இளநீர் வாங்கி பருகினார்.

அதைத்தொடர்ந்து, சாத்தான்குளம் பகுதியில் பொதுமக்களிடையே உரையாற்றிய ராகுல், பின்னர்,  இட்டமொழி, மன்னார்புரம் விலக்கு, பரப்பாடி வழியாக சென்று, நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெற்ற  காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.  ராகுல் சென்ற இடமெல்லாம் பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர்  உற்சாக மிகுதியில் அன்பான வரவேற்பு கொடுத்தனர்.

2வது நாளான நேற்று  திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.  அவர் சென்ற அனைத்து இடங்களிலும் மக்கள் பெருந்திரளாக திரண்டு நின்றதை காண முடிந்தது.

ராகுலின் தென்மாவட்ட சுற்றுப்பயணம், சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு   1989 பேரவைத் தேர்தலின்போது முன்னாள் பிரதமரும், ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி மேற்கொண்ட தென்மாவட்ட தேர்தல் பிரசார சுங்ற்றுப்பயணத்தை நினைவுகூறுவதாகவே அமைந்தது.

ஏற்கனவே 1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராஜீவ்காந்தி இருந்தார்.  தேர்தலையொட்டி, அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்தார். எளிமையான உடையில், சாதாரண மனிதரைப்போல, எந்தவித பேதமுமின்றி கட்சித் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை அனைவரையும் சமமாக பாவித்து சந்தித்து மக்களிடையே வரவேற்பையும் பெற்றது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ராஜீவ் காந்தியின் சுற்றுப்பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1989ம் ஆண்டு தமிழகம் வந்த  ராஜீவ்காந்திக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பு உடன் வாழப்பாடியார்

அப்போதைய தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது, திருச்செந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்திற்கு வந்த ராகுல்காந்திர, அங்கு பிரச்சித்தி பெற்ற திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி,  பல தேவாலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். பல பகுதிகளில், அவரே  ஜீப்பை ஓட்டிச் சென்றார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

1989ம் ஆண்டு  தமிழகம் வந்த ராஜீவ்காந்திக்கு பொதுமக்கள் கொடுத்த வரவேற்பு உடன் வாழப்பாடியார்

தந்தை ராஜீவ்காந்தியைப் போலவே,  தற்போது, தனயன்  ராகுல்காந்தியும் சாதாரண இளைஞரைப் போல, ஜீன்ஸ் டிசர்ட் அணிந்து எளிமையான நடைஉடை பாவனைகளுடன் மக்களை சந்தித்து பேசி வருவது அம்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

ராகுலின் சூறாவளி சுற்றுப்பயணம் குறித்து நினைவுகூர்ந்த  காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள்,  புலிக்கு பிறந்து பூனையாகுமா என்பதை ராகுல் நிரூபித்து உள்ளார் என்றார், ‘‘ராஜீவ் காந்திக்கு பிறகு இவ்வளவு தொலைவு காரிலேய பயணம் செய்து மக்களை சந்தித்த தலைவர் ராகுல்காந்திதான் என்று சிலாகித்தனர்.

1989ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில், ராஜீவ்காந்தியின்  தமிழக தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது, அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட எம்.பி.யாக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியும்  பல பகுதிகளுக்கு உடன்சென்றது குறிப்பிடத்தக்கது.