காபூல்:

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்  பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சண்டையிட்டு வருகிறார்கள்.

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள ‘இண்டர்காண்டினல் ஹோட்டலில்’ குறைந்தது நான்கு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டையிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இந்த சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் பலியானார்கள். மற்றவர்களைப் பிடிக்க பாதுகாப்பு படையினர் முயன்றுவருகின்றனர்.

இது குறித்து ஆப்கன்  உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தள்ளதாவது:

“நேற்று சனிக்கிழமை மாலை ஹோட்டலின் உள்ளே புகுந்த நான்கு பயங்கரவாதிகள் , அங்கு தங்கியிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் எறி குண்டுகளையும் வீசினர்.

இதில் குறைந்தது ஐந்து பேர் காயமடைந்தனர். எத்தனைப் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை.

உள்ளூர் நேரப்படி 21:00 மணிக்குத் தாக்குதல் ஆரம்பித்தது. ஹோட்டலில் இருந்த பாதுகாப்பு காவலர்களைச் சுட்டுவிட்டு, ஐந்து மாடி கட்டடத்திற்குள் பயங்கரவாதிகள் சென்றனர்.

‘இண்டர்காண்டினல் ஓட்டல் ( கோப்பு படம்)

தாக்குதல் நடந்தபோது, மாகாண அதிகாரிகள் கலந்துகொண்ட ஐ.டி மாநாடு அங்கு நடந்துகொண்டு இருந்தது.

பயங்கரவாதிகள், சிலரைப் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகம், ”காபூலில் உள்ள ஹோட்டல்களில் தீவிரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தத் திட்டமிடுகிறார்கள்” என்று எச்சரித்த சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஓட்டல்வாசிகள்,  தங்களது அறைகளில் ஒளிந்து இருப்பதாக ஒரு விருந்தினர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஓட்டலில் 2011-ம் ஆண்டு தாலிபான்களால் தாக்குதல் நடத்தப்பட்டதும் அப்போது ஒன்பது தாலிபான்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.