ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை விட்டு வெளியேறிய ஆப்கனை சேர்ந்த பெண்ணுக்கு அமெரிக்க ராணுவ விமானத்தில் பிரசவமானது.

தாலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியது முதல் தினமும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் தினமும் பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்களை வெளியேற்ற தங்கள் நாட்டு விமானங்கள் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உதவிவருகின்றன.

காபூல் விமான நிலையம் நோக்கிச் செல்வோரை தாங்கள் தடுக்கப் போவதில்லை என்று தாலிபான்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, மேலும் லட்சக்கணக்கான ஆப்கானியர்கள் தாலிபான்களின் பிடியிலிருந்து தப்பிக்க காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர், நிலைமை மோசமானதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் யாரும் காபூல் விமான நிலையம் நோக்கி வர வேண்டாம் என்று நேற்று அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், சொந்த மண்ணை விட்டு அகதியாகச் செல்லும் நாம் மீண்டும் சொந்த நாட்டில் எப்போது மீள் குடியேறுவது எப்போது என்ற கனவோடு நாட்டை விட்டு, ரீச் 828 என்ற எண் கொண்ட அமெரிக்க சி-17 ரக ராணுவ விமானத்தில் வெளியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடுவானில் பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த விமானம் உடனடியாக ஜெர்மனியில் உள்ள ரம்ஸ்டீன் ராணுவ விமானதளத்தில் தரையிறக்கப்பட்டது.

ஓடுபாதையில் நின்ற விமானத்தின் சரக்கு ஏற்றும் பகுதியில் வைத்து விமானத்தில் இருந்த ராணுவ மருத்துவர்கள் குழு அவருக்கு பிரசவம் பார்த்தது.

பிரசவத்திற்குப் பின் அந்தப் பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக கூறியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த இருதினங்களுக்கு முன் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் காபூல் விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு உதவிய சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து தற்போது விமானத்தில் பிரசவமான சம்பவமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அமெரிக்க ராணுவ வீரர்கள் முதியோர், பெண்கள், காயமடைந்தவர்கள் என்று பலதரப்பட்ட மக்களுக்கு காபூல் விமான நிலையத்தில் உதவி வருவதை சமூக வலைத்தளங்களில் படம் பிடித்து பலரும் சிலாகிக்கின்றனர்.