லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக 86 ரன்களை அடித்ததன் மூலம், ஆஃப்கானிஸ்தான் அணியின் 18 வயது இக்ரம் அலி கில், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை முறியடித்தார்.

கடந்த 1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆடிய 19 வயது டெண்டுல்கர், 84 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது தனது 18 வயதில் 86 ரன்களை அடித்ததன் மூலம் புதிய உலகக்கோப்பை சாதனையை செய்துள்ளார் இக்ரம் அலி.

இப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தது.

டெண்டுல்கர் போன்ற ஒரு பெரிய சாதனையாளரின் சாதனையை முறியடித்ததை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்த இக்ரம் அலி, தன்னுடைய ரோல் மாடல் இலங்கையின் முன்னாள் வீரர் சங்ககாராதான் என்றும் தெரிவித்துள்ளார்.

“நான் எப்போது பேட்டிங் செய்தாலும் சங்ககாராதான் என் மனதுக்குள் இருப்பார். எப்போது ரன்கள் தேவையோ, அப்போது அவற்றை எடுக்கும் அவரின் அற்புத திறன்தான், சங்ககாராவை உலகத் தரத்திலான பேட்ஸ்மேனாக ஆக்கியது. எனவேதான், அவரை முடிந்தளவிற்கு என் ஆட்டத்தில் பின்பற்ற முனைகிறேன்” என்றார்.