டில்லி
அரியானா கலவரங்களை முன்கூட்டியே தடுக்காத மத்திய அரசையும் அரியானா அரசையும் தைரியமாக விமரிசித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளை புகழ்பெற்ற வழக்கறிஞர் நாரிமன் பாராட்டியுள்ளார்.
ஃபாலி சாம் நாரிமன் புகழ் பெற்ற உச்சநீதிமன்ற வழக்கறிஞர். இவர் உச்ச நீதி மன்றத்தில் பல பதவிகள் வகித்தவர். பத்ம பூஷன், மற்றும் பத்ம விபூஷன் விருதுகளைப் பெற்றவர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காகவும் வாதாடி உள்ளார்.
சமீபத்தில் அரியானா மாநிலத்தில் சாமியாரின் கைது நடவடிக்கைகளுக்குப் பின் கலவரங்கள் தலை விரித்து ஆடின. அது குறித்து உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சுரிந்தர்சிங் சரோன், சூரியகாந்த், அவ்னீஷ் ஜின்கான் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள், “பிரதமர் என்பவர் நாட்டுக்கு தலைவராக செயல்பட வேண்டும். கட்சித்தலைவராக அல்ல. அதேபோல் மாநில முதல்வரும் மாநில நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும். அரசியல் முடிவுகளை அரசியல் கண்ணோட்டத்தில் எடுக்காமல் கட்சியின் நலனை மனதில் கொண்டு எடுக்கக் கூடாது.” என தெரிவித்திருந்தனர். முக்கியமாக அரியானா இந்தியாவில் இல்லையா என பிரதமருக்கு கேள்வி எழுப்பப் பட்டிருந்தது.
இந்த நீதிபதிகளுக்கு நாரிமன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர், “கலவரங்களை முன் கூட்டியே தடுக்காத மத்திய மாநில அரசுகளை இது போல தைரியமாக விமர்சிப்பது எனக்கு மிகவும் மன மகிழ்வை உண்டாக்கியுள்ளது. எனது மனம் கனிந்த பாராட்டுக்களை இந்த நீதிபதிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் கூறி உள்ளார்.