சென்னை: வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பனங்கருப்படி அரசு நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு வருகின்றன. பனங்கருப்பட்டி, அச்சு வெல்லம், குண்டு வெல்லம் ஆகியவற்றிற்கு 2011ல் தரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெல்லம், கருப்பட்டி – உணவு மாதிரிகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் 232 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 48 மாதிரிகள் தரமற்றவை என கண்டறியப்பட்டு இவற்றின் மீது சட்ட மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பனங்கருப்பட்டி வெல்லம் தயாரிக்கும்போது வெள்ளை அஸ்கா சர்க்கரை மற்றும் கெமிக்கல் சேர்த்து தயாரிக்கப்படுவதாகவும், குண்டு வெல்லம், அச்சுவெல்லம் தயாரிக்கும் போது மைதா, வெள்ளை அஸ்கா சர்க்கரை சூப்பர் பாஸ்பேட், கால்சியம் கார்பனேட், சோடியம் ஹைட்ரோ சல்பேட் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற கெமிக்கல்களும் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் ஆகியவை கலப்படம் செய்யப்படுவதாக புகார்கள் பெறப்பட்டுள்ளது.
பொதுவாக கலப்படமற்ற வெல்லம் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட வெல்லம் வெளிர் பழுப்பு அல்லது அடர் மஞ்சள் அல்லது வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அதே போல் பொதுவாக கலப்படமற்ற பனங்கருப்பட்டி, வெளிர் பழுப்பு நிறத்தில் இருக்கும் சர்க்கரை கலப்பட பனங்கருப்பட்டி கரும் பழுப்பு நிறத்தில் இருக்கும். எனவே, வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டியில் செய்யப்படும் கலப்படத்தை தடுக்க பொதுமக்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெல்லம் மற்றும் பனங்கருப்பட்டி ஆகியவை தயார் செய்யப்படும் இடங்களின் முழு உற்பத்தி செயல்முறைகளை கண்காணிக்கவும், புகார்கள் ஏதும் பெறப்பட்டால் உற்பத்தி செய்யப்பட்ட செயல்முறைகளை மறு ஆய்வு செய்யவும், அனைத்து தயாரிப்பு நிலையங்களிலும் மூலப்பொருட் களின் வருகையில் இருந்து, உற்பத்தி செய்யப்படும் இறுதி நிலை வரை உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
போதிய விழிப்புணர்வு இல்லாததால் பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை விட மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் உள்ள கவர்ச்சிகரமான வண்ணங்களில் உள்ள வெல்லம் சிறந்தது என தவறான கருத்து நிலவுகிறது. இத்தகைய மஞ்சள், ஆரஞ்சு, வெளிற் நிறங்களில் விற்கப்படும் வெல்லத்தை வாங்க வேண்டாமென்றும், இவ்வகையான வெல்லங்கள் விற்பனை செய்தால் அதுகுறித்து புகார் அளிக்கவும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.