சென்னை:

அதிமுக இரு அணிகள் இணைப்பு இன்று நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்காக ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இரு அணிகளின் நிர்வாகிகளும் தனித்தனியே அவரவர் வீடுகளின் ஆலோசனை நடத்தினர்.

இதனால் எந்த நேரமும் இருவரும் ஜெயலலிதா நினைவிடம் வந்து இணைப்பு அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அங்கு அதிமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்தனர். ஒரு சிலர் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இரு அணி ஆதரவும் எம்எல்ஏ.க்களும் அங்கு வர தொடங்கினார். ஆனால் நீண்ட நேரமாகியும் இணைப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. அதோடு மெரீனா பகுதியில் கன மழை பெய்ய தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்களும் கலைந்து சென்றனர். இரு அணிகள் இணைப்பு இல்லாததால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது குறித்து ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த கோவை சத்யன் கூறுகையில், ‘‘ ஓ.பி.எஸ் அணி சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு இல்லை. நாளை இருந்தால் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றார்.

மேலும், இறுதி முடிவை ஓபிஎஸ் அறிவிப்பார் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட பிஎச்.பாண்டியன் தெரிவித்தார். மேலும் அணிகள் இணைப்பில் தாமதம் குறித்து ஓ.பி.எஸ் அணி தரப்பினர் வெளிப்படையாக தெரிவிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.