சென்னை
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு அளிக்க அதிமுக தனது உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகத் தேர்தல் பணியில் இறங்கி உள்ளன. திமுக மற்றும் காங்கிரஸ் ஒரு அணியிலும் அதிமுக மற்றும் பாஜக மற்றொரு அணியிலும் போட்டியிட உள்ளன. தொகுதிப் பங்கீடு இன்னும் முடியவில்லை.
இந்நிலையில் இன்று அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24 ஆம் தேடி முதல் மார்ச் மாதம் 8 ஆம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப மனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்பட உள்ளன.
இந்த விருப்ப மனுவுக்கு விண்ணப்பக் கட்டணமாகத் தமிழகத்துக்கு ரூ.15000, புதுச்சேரிக்கு ரூ.5000 மற்றும் கேரளாவுக்கு ரூ.2000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பெற்று அவற்றின் மூலம் விண்ணப்பிக்க அதிமுக தனது உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.