சென்னை: அடுத்த 5  ஆண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம் என்று திமுக எம்பி கனிமொழிக்கு அதிமுக பதிலடி தந்துள்ளது.

 

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார். விதி எண் 110ன் கீழ் பேசிய போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கடன் தள்ளுபடியால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட திமுக எம்பி கனிமொழி, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி தளபதி சொல்வதை எல்லாம் செய்ய துடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள்” என பதிவிட்டு இருந்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் ஜனவரி 30 ஆம் தேதி தனது பிரசாரத்தில் போது திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறியிருந்ததையும் மேற்கோள்காட்டியிருந்தார்.

இப்போது இதற்கு பதிலளித்துள்ள அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: அடுத்த ஐந்தாண்டுகளுக்கும் நீங்கள் சொல்லிக்கொண்டதாய் நினைத்து கொண்டே இருங்கள், ஆனால் செய்வது நாங்களாக மட்டும் தான் இருப்போம். பின்குறிப்பு : வெற்று #அறிக்கைநாயகன் ஸ்டாலின் என்ற பட்டத்தை உறுதி செய்த கனிமொழி அவர்களுக்கு நன்றி என்று பதிவிட்டு உள்ளது.