சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், உள்ளே அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் விரைவில் நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் நகராட்சி, பேருராட்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறுதல்,  அதிமுகவுக்கு புதிய அவைத்தலைவர் நியமனம், சசிகலாவின் அச்சுறுத்தல்,  அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம், உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11- லிருந்து 18 ஆக விரிவுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் வெளியே  செங்கல்பட்டு மாவட்ட தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலத்தூர் ஒன்றிய  அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ மரகதம் குமரவேல் ஆதிக்கம் செலுத்துவதாகவும் , இலத்தூர் அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்ற பதாகையுடன் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.