திருச்சி: சசிகலாவை வரவேற்று, ஆதரவு போஸ்டர்கள் அடித்த அதிமுகவின் மேலும் ஒரு நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை தண்டனை முடிந்து 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். கொரோனா தொற்று காரணமாக பெங்களுரூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேசி வருவதோடு போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். திருச்சி வடக்கு மாவட்ட அதிமுகவுக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை என்பவர் சசிகலாவை வரவேற்று திருச்சி மாநகரில் பல இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

அதில், 36 ஆண்டுகள் டாக்டர் இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களோடு தவ வாழ்க்கை வாழ்ந்த அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மா அவர்களே வருக வருக என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந் நிலையில், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரையை கட்சியில் இருந்து அதிமுக நீக்கியுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதித்ததில் செயல்பட்ட காரணத்தினாலும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புடன் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.