சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது விடுதலையாகியுள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஆனால், அவரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டோம் என்றும், அவரால் எந்தவித தாக்கமும் ஏற்படாதென்றும் கூறி வருகின்றனர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரின் ஆதரவாளர்களும். அதேசமயம், ஓபிஎஸ் தரப்பில் மவுனம் காக்கப்படுகிறது மற்றும் அவரின் இளைய மகன், சசிகலா குணமடைவதற்கு வாழ்த்தும் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் நடத்திவரும் அமமுக கட்சிக்கு, அவர்கள் விரும்பிய குக்கர் சின்னமும் கிடைத்துவிட்டது. அவர்கள், தனியாக தேர்தல் களமிறங்கினால், அதிமுகவின் வாக்கு வங்கியில் எப்படியும் குறைந்தது 15% அளவிற்கு காலி செய்து விடுவார்கள் என்பது கணிப்பாக உள்ளது.

எனவே, இப்போதைய சூழலில், தன்னை முதல்வர் வேட்பாளராக ஆக்கிக் கொண்ட எடப்பாடியுடன் மோதி, உடல்நலன் சரியில்லாத நிலையில், ஆற்றலை வீணாக்குவதற்கு பதிலாக, சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை படுதோல்வி அடையச்செய்து, எடப்பாடியின் வலிமையை காலிசெய்து, ‍அதன்பிறகு அனைவரையும் தன்ன‍ை நோக்கி வரச்செய்யும் திட்டத்தில் சசிகலா இருக்கலாம் என்றே சில அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.